AMAZING SPECIES

Thursday, November 8, 2012

ஆரக்கிள் பயிற்சி துவக்கவிழா 14 -10 - 2012











கேலிபர் (Coimbatore Association for Locomotor Impairment’s Betterment Empowerment and Rights (CALIBER)) மாற்றுத்திறனாளிகள் அமைப்பு 2007ஆம் ஆண்டு ஏழு மாற்றுத்திறனாளிகளால் உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை வென்றெடுக்க ஏற்படுத்தபட்ட இந்த அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசப் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவி வருகிறது கேலிபர். ஐந்தாண்டுகளில் 350 மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சியும், 180 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பும் பெற்றுத் தந்த நிறுவனம் கேலிபர். ஆரோக்கிய குடுமபம் என்னும் அமைப்பு ஆனைகட்டி செல்லும் வழியில் உள்ள மாங்கரை என்னுமிடத்தில் மாற்றுததிறனாளிகளுக்கு ஒரு இலவச விடுதியை ஏற்படுத்தித் தந்துள்ளது. அவ்விடுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு "இலவச ஆரக்கிள் பயிச்சி"யை அளிக்க சிக்ஸ்த் சென்ஸ் என்ற அமைப்பும் சென்‍னையைச் சேர்ந்த சிஸ்ரெஸ் ஆரக்கிள் எஜூகேஷனல் மையமும், கேலிபர் அமைப்பும் இணைந்து கூட்டாக செயல்பட்டது. சுமார் ஒரு லட்சம் ரூபாய் கட்டணத்தில் சென்னையில் வழங்கப்பட்டு வரும் ஒரு பயிற்சியை கோவையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பையும் பெற்றுத் தருவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கான துவக்கவிழா 14-10-12 அன்று யூடிஸ் போரம் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. ஆரோக்கிய குடும்பத்தின் தலைவர் டாக்டர் ராஜூ மற்றும் டாக்டர் எம்.என்.ஜி.மணி பொதுச் செயலாளர் பார்வையற்றோருக்கான சர்வதேசக் கல்விக் கழகம், அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். சிக்ஸ்த் சென்ஸ் சார்பில் திரு.ஹரிஹரன், சிஸ்ரெஸ் நிறுவனத்தின் சார்பாக திரு. மணிவண்ணன், திரு.தன்ஷீர், மற்றும் கேலிபர் ரவி, கேலிபர் சந்திரகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். திரு.ஹரிஹரன் அவர்கள் பேசும் பொழுது " மாற்றுத்திறனாளிகளின் பயிற்சி, கல்வி, வேலை வாய்ப்பு, ஆகியவற்றிற்கு எங்கள் சிக்ஸ்த் சென்ஸ் அறக்கட்டளை உதவும்" என்று கூறினார். டாக்டர் ராஜூ அவர்கள் பேசும் பொழுது "மாற்றுத்திறனாளிகள் மிகுந்த திறமை சாலிகள் அவர்களை இந்த சமூகம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் திறமைக்கு மதிப்பளித்து அவர்களை உயர்த்த வேண்டும், அவர்களின் முன்னேற்றத்திறகுத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்" என்று கூறினனார்.  டாக்டர் எம்.என்.ஜி.மணி அவர்கள் பேசும் பொழுது "மாற்றுத்திறனாளிகள் அதிகாரம் மிக்க பதவிகளுக்கு வர வேண்டும். சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொண்டு, மிகவும் அறிவார்ந்த முடிவெடுக்கும் திறமை மிக்கவர்கள் மாற்றுத்திறனாளிகள். அவர்களின் திறமை இந்த சமூகத்தற்கு கிடைக்க வேண்டும். யூடிஸ் ஃபோரத்தின் நிர்வகப் பொறுப்பு விரைவில் மாற்றுத்திறனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். தற்பொழுது என்னைத் தவிர அனைத்து நிர்வாகிகளும் மாற்றுத்திறனாளிகளே. அவர்களே அவர்கள் சமூகத்தை வழி நடத்த வேண்டும். என்போன்றோர் அதற்குத் துணையாக இருந்து உதவ வேண்டும்" என்று கூறினார். இவ்விழாவில் சூலூர் அருகே உள்ள பொத்தியாம் பாளையத்தைச் சேர்ந்த ஏழை விவசாயின் மகள் பானுசுந்தரி மைக்கேல் ஜாப் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப வணிகவியலில் பாரதியார் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவியாக வந்து தங்கப் பதக்கம் பெற்றவர், பாராட்டி கெளரவிக்கப்பட்டார். மேலும் கேலிபர் பயிற்சி மையத்தில் ஆறுமாத டி.என்.பி.எஸ்.சி பயிற்சி முடித்து தேர்வு எழுதி வெற்றி பெற்ற திரு.பாலகணேஷ் என்னும் செவித்திறன் குறைபாடு உடைய மாணவரும் பாராட்டி கெளரவிக்கப்பட்டார். "மாற்றுத்திறனாளிகள் முரசு" ஆசிரியர் திரு.வேல்முருகன் மற்றும் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கேலிபர் ரவி அனைவருக்கும் நன்றி கூறினார். கேலிபரின் முயற்சிகள் தொடரும்.   

No comments: