பதிவு செய்த நாள் : நவம்பர் 09,2012,00:33 IST
கோவை:ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி) மாற்றுத் திறனாளிகளுக்கு, சலுகை மதிப்பெண் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பட்டப்படிப்புடன் பி.எட்., அல்லது பிளஸ் 2 முடித்தவுடன் ஆசிரியர் பட்டய படிப்பு படித்தால், ஆசிரியர் ஆகி விடலாம் என்ற நிலை கடந்த காலத்தில் இருந்தது. தற்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில், 90 மதிப்பெண்கள் பெறுபவருக்கு மட்டுமே ஆசிரியர் பணி என்ற நிலை உள்ளது. பொதுமக்கள் மத்தியில் இந்த ஆரோக்கியமான நடைமுறை பரவலான வரவேற்பு பெற்றாலும், போராட்டமே வாழ்க்கையாகி விட்ட மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏழ்மையான பின்னணியில் படித்து, வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடையும் நோக்கத்துடன் படிக்கும் மாற்றுத்திறனாளிகள் பலர், "டெட்' தேர்வில் வெற்றி பெற முடியாமல் திணறுகின்றனர்.சிரமப்பட்டு படித்தும் தகுதித் தேர்வில் வெற்றி பெற முடியாத மாற்றுத் திறனாளிகளில், திருப்பூர் பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த சரவஸ்வதியும் ஒருவர். இரண்டு வயதில் போலியோ தாக்கியதில் கால்களின் இயக்கத்தை இழந்த இவருக்கு தந்தை கிடையாது. தவழ்ந்தவாறு வீட்டின் அறைகளுக்குள் வலம் வந்த இவருக்கு, பாரத ஸ்டேட் வங்கி மூன்று சக்கர சைக்கிள் வழங்கியது.உடன் படித்த மாணவியரின் உதவியால் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சிரமப்பட்டு முடித்தார். 2009ல் பி.எட்., படிப்பை முடித்துள்ள இவருக்கு, "டெட்' தேர்வு பெரும் சவால் ஆக அமைந்துள்ளது. இதுகுறித்து சரஸ்வதி கூறியதாவது:ஆசிரியர் தகுதி தேர்வில் 90 மதிப்பெண் பெற்றாக வேண்டும் என்ற புதிய நிபந்தனையால், எனது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 12.7.2012ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 65 மதிப்பெண்ணும், 14.10.2012ல் நடைபெற்ற மறு தேர்வில் 80 மதிப்பெண்ணும் (கீ ஆன்சர் ஒப்பீடு) மட்டுமே பெற முடிந்தது.நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களும், என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளும் ஒரே மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவில் சிறிதும் நியாயமில்லை; தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சரஸ்வதி கூறினார்.
கோவை மாவட்ட கை, கால் ஊனமுற்றோர் உரிமைக்கான சங்கத்தின் தலைவர் நாகப்பன் சூர்யா கூறுகையில், ""ஆரோக்கியமானவர்களுடன் எங்களை போட்டி போட வைப்பது எப்படி சரியாகும்? கை, கால் இழந்தவர்களுக்குதான் போராட்டத்தின் வலி புரியும். ஆசிரியர் தகுதி தேர்வில் தனி ஒதுக்கீடு, சலுகை வேண்டும். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், பிறரை விட அதிக மதிப்பெண் பெற்றால் அவரை "மெரிட்' பட்டியலில்தான் சேர்க்க வேண்டும்,'' என்றார்.