AMAZING SPECIES

Monday, October 17, 2011

Dinamalar, 29-09-2011- NEWS

கோவை : "செவிட்டு ஊமைகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது' என்று, விதிமுறை வகுத்துள்ள தேர்தல் ஆணையத்துக்கு, மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர், கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சி 84ம் வார்டில் போட்டியிடுகிறார், பாஸ்கர். இவருக்காக, தெற்கு மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வந்திருந்தனர், நிர்வாகிகள். கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சூர்ய நாகப்பன் கூறியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதற்காகவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். கடந்த பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில் 70 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் எதுவும் இல்லை. பஸ்ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களில் பொதுக்கழிவறைகள் இல்லை. மருத்துவச்சான்று, டிரைவிங் லைசன்ஸ் வாங்குவதில் பல பிரச்னைகள் உள்ளன. எங்களது கோரிக்கை வலியுறுத்த, எங்களுக்கும் ஜனநாயக பிரதிநிதித்துவம் தேவை. பெண்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு தருவதைப்போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தருகிறார்களோ, இல்லையோ, வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு இருக்கிறது. அதேபோன்ற ஒதுக்கீட்டை, இது மாதிரியான பதவிகளிலும் தரவேண்டும் என்று வலியுறுத்தவே நாங்கள் போட்டியிடுகிறோம்.
தேர்தல் விதிகளில், "செவிட்டு ஊமைகள்' போட்டியிடக்கூடாது என்றொரு விதிமுறை உள்ளது. அவர்கள் ஓட்டளிக்கலாம்; ஆனால், போட்டியிடக் கூடாதா? "செவிட்டு ஊமை' என்ற வார்த்தையே தவறு. "மாற்றுத்திறனாளி என்று தான் கூற வேண்டும்' என தேர்தல் ஆணையத்துக்கு தெரியாதா? ஆணையத்தின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. காது கேளாத, பேச முடியாதவர்களின் சைகை மொழி, ஒரு சர்வதேச மொழி. அதை புரிந்து கொள்ளத்தவறுவது யார் குற்றம்? பேச முடியாத குறையுடைய மாணவர்கள் பல பட்டங்களை பெற்றுள்ளனர். அவர்களால் நிர்வாகம் செய்யவும் முடியும். அவர்களது தகுதி, திறமையை பின்னுக்கு தள்ளி, ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதை அனைவருக்கும் புரிய வைக்கவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: