யூடிஸ் ஃபோரம், கேலிபர் இணைந்து 31-5-2013 அன்று கோவை ராம்நகரில் உள்ள எம்.எஸ்.எம்.இ. அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நாள் சுயதொழில் பயிற்சி மற்றும் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடத்தியது. இதில் 53 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் யூடிஸ் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சூர்ய.நாகப்பன் வரவேற்புரை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சிக்கு வருகைதந்திருக்கும் மாற்றுத்திறனாளிகளையும், தொழில் முனைவோர்களையும், பயிற்சியாளர்களையும், எம்.எஸ்.எம்.இ, துணை இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோர்களையும் வரவேற்று நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
எம்.எஸ்.எம்.இ. துணை இயக்குநர் திரு.பழனிவேல் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் சுயமாகத் தொழில் செய்து முன்னேறுவதற்கான தேவைகளையும், அதற்கான வழிவகைகளையும் எடுத்துக் கூறினார். தொழில் முனைவோர் பயிற்சிகளில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகச் சேர்ந்து பயிறசி எடுக்கலாம் என்பதை நினைவூட்டினார். உடனடியாக சில மாற்றுத்திறனாளிகள் தங்களின் பெயர்களை அடுத்து வரவிருக்கும் தொழில் முனைவோர் பயிற்சியில் இணைத்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தனர்.
எம்.எஸ்.எம்.இ, உதவி இயக்குநர் திரு.விஜயகுமார் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு சலுகைகள், கடன்கள், கடன் தொகையில் மானியம் முதலியவற்றைத் தெளிவாக விளக்கிக் கூறினார். வேலை இல்லாதோர் வருமானப் பெருக்கத் திட்டம், பாரதப்பிரதமரின் சுய வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவற்றையும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
கொடீசியா தொழில் முனைவோர் பயிற்சி அமைப்புத் தலைவர் பொறியாளர் ஜெயகோபால் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் செய்யக் கூடிய பல சுயதொழில்கள் பற்றித் தெரிவித்தார். எந்த வகையான தொழில்களைத் துவங்கினால் எவ்வாறு பயன் பெறலாம் என்பதை விளக்கிக் கூறினார். பிறரிடம் தொழிலாளியாக இருப்தைவிட, பெரிய தொழில் முனைவோராக வர முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினார். ஜுன் 6ஆம் தேதி கோவை கொடீசியாவில் நடைபெறும் தொழிற் கண்காட்சியில் கலந்து கொள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளாகவும் சிறந்த தொழில் முனைவோராகவும் இருக்கும் திரு.விவேக், திரு.மகேஸ் சங்கர் கலந்து கொண்டு தங்களது தொழில அனுபவங்களை விளக்கினார்கள். மிகக் குறைந்த முதலீட்டில் தொழிலைத் துவங்கி இன்று மிகவும் சிறப்பாக நிறுவனத்தை உயர்த்தி பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்துள்ளதை விளக்கிக் கூறினர்.
ஆரோக்கியக் குடும்பம் அமைப்பின் தலைவர் மருததுவர் ராஜு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் துவங்க இலவசமாக இடம், மின்வசதி, தண்ணீர் வசதி மாங்கரையில் செய்து கொடுத்துள்ளேன். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சியளிக்க வந்திருந்த மாற்றுத்திறனாளி மகளிர் அமைப்பைச் சேர்ந்த குமாரி.மீனா, குமாரி.பாலகிருத்திகா ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே சுயமாகச் செய்யக் கூடிய பல்வேறு தொழில்களைப் பற்றிக் கூறினர். இதற்கென ஒரு நாள் சிறப்புப் பயிற்சியை வழங்கவும் முன்வந்தனர். இந்தப் பயிற்சி யூடிஸ் ஃபோரம் அலுவலகத்தில் வரும் 8-6-13 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் கேலிபர் அமைப்பைச் சேர்ந்த திரு.சந்திரகுமார், திரு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
No comments:
Post a Comment