கோவை மேட்டுப்பாளையம் சாலை சேரன் நகரில் அமைந்துள்ள யூடிஸ் அமைப்பின் பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளி மகளிருகளுக்கான ஒருநாள் தொழிற் பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு யூடிஸ் நிர்வாக இயக்குநர் சூர்ய.நாகப்பன் தலைமையேற்றார். அவர் தனது உரையில் "மாற்றுத்திறனாளிகள் கிடைக்கும் சிறிய வாய்ப்பைக் கூடப் பயன்படுத்தத் தவறக் கூடாது. இது போன்ற சிறிய பயிற்சியின் மூலம் கூட சுயமாக சம்பாதிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள இயலும்" என்று கூறினார். நிகழ்ச்சியில் சிறப்புறை நிகழ்த்திய யூடிஸ் தலைமைச் செயலர் திரு.சுப்பிரமணிய சிவா அவர்கள் தனது உரையில் "மாற்றுத்திறன் மகளிர் பிறரிடம் கையேந்தாமல், தங்களது உழைப்பில் வாழ வேண்டும். யுடிஸ் ஃபோரம் உங்களுக்கு அனைத்துப் பயிற்சிகளையும் முற்றிலும் இலவசமாக வழங்கி வருகிறது. இந்தப் பயிற்சிகளை தொடர்ச்சியாகச் செய்து பொருளீட்ட வேண்டும்." என்று கூறினார். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்வர்ணபூமி ஆர்ட் காலரி இயக்குநர் மணிமாறன் அவர்கள் பேசும் பொழுது "மாற்றுத்திறனாளிகள் தங்களது கற்பனைத் திறனால் பல படைப்புகளை உருவாக்க முடியும். சிந்தனையை ஒருங்கிணைத்து பயிற்சியுடன் முயற்சி செய்தால் படைப்புகளை சிறப்பாக உருவாக்கலாம்" என்றார்.
இப் பயிற்சியில் ஃபேன்சி நகைகள் செய்வதற்கான பயிற்சி இருபது மாற்றுத்திறனாளி மகளிருக்கு வழங்கப்பட்டது. கோவை மாற்றுத்திறன் மகளிர் அமைப்பைச் சேர்ந்த குமாரி.பாலகிருத்திகா, குமாரி.மீனா ஆகியோர் பயிற்சியளித்தனர். சிறப்புப் பயிற்சியாளராக ஸ்வர்ணபூமி ஆர்ட் கேலரியைச் சேர்ந்த திரு.மணிமாறன் அவர்கள் கலந்து கொண்டு புதிய புதிய வாய்ப்புகளையும், தேவையற்ற பொருட்கள் என்று கருதித் தூககி எறியும் பொருட்களையும் கலைப்படைப்புகளாக்கலாம் என்பதையும் விளக்கிப் பயிற்சியளித்தார். பல்வேறு புதிய படைப்புகளை எவ்வாறு உருவாக்குவது, படைப்பாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொள்வது போன்றவை இவரது பயிற்சியில் அடங்கியிருந்தது.
பயிற்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறன் மகளிர் குமாரி.விஜி கூறும் பொழுது "முதல் முறையாக இது போன்ற பயிற்சியில் கலந்து கொள்கிறேன். ஊனமுற்ற எனக்கு தற்பொழுது ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. எந்த வேலைக்கும் செல்ல இயலவில்லை. இந்தப் பயிற்சியின் மூலம் வீட்டிலிருந்தே ஃபேன்ஸி மாலைகள், வளையல்கள், காதணிகள் தயாரித்து சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்றார்.
நிகழ்ச்சியில் கேலிபர் நிர்வாகிகள் ரமேஷ், சக்திவேல், மோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.