AMAZING SPECIES

Thursday, February 24, 2011

கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் தொடரும் அவல நிலை. . .

கோவை மாநகராட்சியின் பட்ஜெட் 23-2-11 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் மட்டுமல்ல கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில் கூட மாற்றத்திறனாளிகளின் நலன்களுக்கென எந்தவித திட்டங்களையும் சேர்த்துக் கொள்வதில்லை. தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் 1.14 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் கோவையில் (2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு) எந்த விதமான திட்டங்களையும் அவர்களுக்கு அறிவிக்கவில்லை. 415 கோடி ரூபாயை செலவளிக்கும் இந்த மாநகராட்சிக்கு ஏன் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகள் புரிவதில்லை?.

1.மாற்றுத்திறனாளிகளுக்கென பேருந்து நடை‍மேடையை உயர்த்தி அவர்களின் சக்கர நாற்காலிகளோடு பேருந்தில் பயணம் செய்யும் வசதி இந்த மாநகராட்சியில் எங்குமே இல்லை.

2. மாற்றுத்திறனளிகள் பயணம் செய்யும் வகையில் ஒரு பேருந்து கூட இயக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 40 ஆயிரம் கை கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?

3. மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பான கழிவறைகள் எங்குமே அமைக்கப்படவில்லை. தவழ்ந்து செல்லும் ஒரு மாற்றுத்திறனாளி கழிவறைக்கு சென்று திரும்பும் பொழுது உடல் முழுவதும் சிறுநீரை அப்பிக் கொண்டு வருவதை நீங்கள் பார்க்கவில்லையா? அந்த துயரத்தை இவர்கள் உணரவில்லையா?

4. உள்ளாட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான எந்த வணிக வளாகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் சென்று வர இயலாத அவலநிலையே நீடிக்கிறது. சரியான சாய்தள வசதிகள் இல்லை. லிப்ட் வசதிகளும் இல்லை.

5. பார்வைக் குறைபாடு உடையவர்கள் சாலையைக் கடக்கும் பொழுது ஒலிகளை எழுப்பும் வசதிகளைக் கூடச் செய்யவில்லை. அவர்களின் உயிர் பற்றிய எந்த அக்கறையும் இல்லை இந்த உள்ளாட்சி நிர்வாகத்திற்கு.

6. மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு மருத்துவமனைகள் கூட இல்லாத ஒரு மாநகரம் இந்த கோவை மாநகரம்.

7. நூலகங்கள், பூங்காங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சந்தைகள், என்று எந்த இடத்திற்கும் மாற்றுத்திறனாளிகள் சென்று வர இயலாத சூழ்நிலை.

8. பார்வைக் குறைபாடு உடையவர்கள் பாட்டுப்பாடிப் பிச்சையெடுப்பபது உங்கள் கண்களில்படவில்லையா? பல்வேறு சிக்னல்களில் கையேந்தி பிச்சையெடுக்கும் ஊனமுற்றோரை, பார்வைக் குறைபாடு உடையவர்களை நீங்கள் சந்திக்கவில்லையா?

9.காது கேளாத வாய் பேச இயலாதவர்களுக்கென ஒரு சிறப்பு கல்லூரியை இந்த மாநகரத்தில் நிறுவிட ஏன் உள்ளாட்சி அமைப்புகளோ, மாற்றுத்திறனாளிகளை வைத்து பிழைப்பு நடத்தும் என்.ஜி.ஓக்களோ ஏன் செய்யவில்லை?

யூ.என்.சி.ஆர்.பி.டி கூறியுள்ள உள்ளாட்சி அதிகாரத்தில் மாற்றுத்திறாளிகளின் பங்கேற்பும், வளங்களில் அவர்களுக்கான ஒதுக்கீடும் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகிறது.


உள்ளாட்சி அமைப்புகளுக்கு இவற்றையெல்லாம் புரிய வைத்து அவர்களுக்கான திட்டங்களை உருவாக்கிடச் செய்ய வேண்டிய மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் முக்கிய பொறுப்பு உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றம் தொண்டு நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன. என்.ஜி.ஓக்கள் இந்த பட்‍ஜெட் பற்றி என்ன கருத்துகளை வெளியிடுகின்றன?

அவினாசிலிங்கம், ராமகிருஷ்ணமிஷன் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கென பணிகளைச் செய்து வருகின்றவர்கள் பட்ஜெட் பற்றிக் கூறும் கருத்தென்ன?

இன்னும் இந்த என்.ஜி.ஓக்கள் தங்களின் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றிக் கொள்ள மாற்றுத்திறனாளிகளை எத்தனை காலம் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றன.

எங்களை அடிமையாய் இரு, அண்டிப்பிழை, ஆமை போல் ஒடுங்கு என்று கூறுவது எவனடா? உரிமைக்காக எங்கள் குரல் ஒலிக்கும் போதெல்லாம் சலுகை ரொட்டிகளை வீசி எறிந்து எமது குரல்வளையை ஒடுக்குவது ‍எவனடா? தொடரும் எமது துன்ப துயரங்களைக் களையாமல் பொறுத்துக் கொள் என்று கூறும் காட்டுமிராண்டி யார்? இன்னும் எத்தனை காலம், இதற்கெல்லாம் ஒரு விடிவே இல்லையா?

டிசம்பர் 3 வந்தால் நாம் எமது உரிமைகளுக்காக பட்டினிப் பேராட்டங்களை நடத்தினால் மற்றவர்கள் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் என்று குதூகலிக்கின்றனர்.

அமைதியான வழியில் பல்லாண்டுகாலமாகப் போராடி வருகின்றோம் அதற்குப் பலனேதும் இல்லை. "நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை நமது எதிரியே தீர்மானிக்கிறான்" என்பார் மாவோ. இனி எப்படிப் போரடுவது என்று எமக்குக் கற்றுக் கொடுங்கள்.

வரும் மார்ச் 30ஆம் தேதி யூ.என்.சி.ஆர்.பி.டி சாசனத்தில் இந்தியா கையெழுத்திட்ட ஐந்தாம் ஆண்டு நிறைவு. அன்று மாற்றுத்திறனாளிகள் தங்களின் அடுத்த கட்ட போராட்டத்தை திட்டமிடுவார்கள்.

No comments: